“எனது இலை,எனது தொழிற்சாலை”

18 / Sep / 2019

விவசாயத்தில் ஈடுபட்டு,தங்களது நிலத்தில் விளைந்த விவசாயப் பொருளுக்கான விலையைப் பெற,அதனைத் தொடர்புடைய தொழிற்சாலைக்கு அனுப்பி வரும் ஒவ்வொரு விவசாயிக்கும் “ஏன்,தாங்களே ஒரு தொழிற்சாலை துவங்கக்கூடாது?” ;”ஏன்,தங்களின் மூலப்பொருளின் மூலம் கிடைக்கும் இலாபத்தை தாங்களே அடையக்கூடாது?” போன்ற வினாக்கள் எப்போதாவது மனதில் எழுந்திருக்கும்.

எல்லா விவசாயிகளின் மனதிலும் எழும் இவ்வினா,நம் நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை விவசாயிகளின் மனதிலும் எழுந்தால்,அதில் வியப்பு ஒன்றுமில்லை.தங்களின் உழைப்பிலும்,முயற்சியிலும் விளைந்த தேயிலைத்தழையினை, தேயிலைத்தூளாக மாற்றும் தேயிலைத் தொழிற்சாலை ஒன்றினை தாங்களும் நிறுவி,தொழில் முனைவோராக,தொழிலதிபராக மாற வேண்டும் ;தங்களது வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

தொழில் அறிவின்மை ( Lack of Industrial Knowledge)

ஒரு தொழிலைத் துவங்க யாரை அணுக வேண்டும்; திட்ட அறிக்கைகள் எவ்விதம் தயார் செய்ய வேண்டும்; உற்பத்தி செய்யப்படும் பொருளை எவ்விதம் சந்தைப்படுத்த வேண்டும்; இலாபத்தினை எவ்விதம் கணக்கிட வேண்டும்; தேவையான பணியாளர்களை எவ்விதம் கண்டறிவது; தேவைப்படும் நிதி ஆதாரத்தை எவ்விதம் திரட்டுவது… போன்ற பூர்வாங்கக் கேள்விகளுக்கு விடை தெரியாமல் எந்தத் தொழிலையும் துவங்க இயலாது. இவ்வித சந்தேகங்களுக்குத் தீர்வு சொல்ல பல முகமைகள் (Consultancy) இருப்பினும், அவற்றில் சேவை மனப்ப்பான்மைக்கு முக்கியம் அளித்து, நியாயமான மற்றும் சாத்தியமான ஆலோசனைகளைக் கூறும் முகமைகளைக் கண்டறிவது தொழில் முனைவோராக விரும்புவோருக்கான மிகப்பெரிய சவாலாகும்.

நடைமுறைச் சிக்கல்கள்( practical difficulties)

ஒருவேளை,விவசாயி ஒருவர் தனக்குத் தேவையான தொழில் அறிவைப் பெற்றிருந்தாலும்,அதனை செவ்வனே செயல்படுத்தி தொழிற்சாலையை நிறுவுவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு அஞ்சி,தனது கனவினை நிறைவேற்ற இயலாது போகும் சாத்தியங்களும் உள்ளன.
இவ்விரண்டு தடைகளின் பின்னணியிலேயே நம் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகளின் தொழிற்சாலைக் கனவினையும் அணுக வேண்டியுள்ளது.
ஒரு நடுத்தர தேயிலைத் தொழிற்சாலையினை நிறுவிட 4 முதல் 5 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிற சூழலில் நீலகிரி மாவட்டம்.அதனுடைய வன வளம் காரணமாக பலவித சுற்றுப்புறப் பாதுகாப்பு விதிகளையும் விதித்துள்ளது.இத்தகைய தொழிற்சாலையை நிறுவிட HACA,வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிர்வாக அனுமதியைப் பெறுவதில் ஏற்படும் நடைமுறைச்சிக்கல்களையும்,இதனால் ஏற்படும் கால தாமதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.இக்காரணங்களால் தேயிலைத் தொழிற்சாலை ஒன்றினை சாதாரண சிறுதேயிலை விவசாயிகள் துவக்குவது என்பது வெறும் கனவாகவே முடிவற்கான வாய்ப்புகளே அதிகம்.
இச்சூழலில்தான் “இண்ட்கோசர்வ்” சிறு தேயிலை விவசாயிகளின் கனவினை நனவாக்க முன்வந்துள்ளது.”இண்ட்கோசர்வ்” நிறுவனமானது ,நீலகிரி மாவட்ட சிறுதேயிலை விவசாயிகளுக்கு ,அவர்களின் பசுந்தேயிலைக்கான ஆதார விலையினைப் பெற்றுத் தருவதிலும்,நிர்ணயிப்பதிலும் கடந்த 50 வருடங்களாக நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கியப்பங்காற்றி வருவதாலும்,சிறுதேயிலை விவசாயிகளின் வாழ்வில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருவதாலும்,இவ்விவசாயிகளை “தொழில் முனைவோர் ” என்னும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று,அவர்கள் வாழ்வை மேலும் வளப்படுத்த,தன்னால் இயன்ற வழிக்காட்டுதலை அளிக்க முன்வந்துள்ளது.எனவே ,சிறுதேயிலை விவசாயிகளின் தொழிற்சாலைக் கனவினை நனவாக்கும் பொருட்டு “குறு தேயிலைத் தொழிற்சாலை “(Micro CTC Tea Factory) என்னும் கருத்தினை முன் வைக்கிறது….

“குறு தேயிலைத் தொழிற்சாலை” (Micro Tea Factory)

இத்தகைய “குறு தேயிலைத் தொழிற்சாலை ” ஒன்றினை இன்றையத் தேதியில் அறுபது இலட்சம் ரூபாயில் (நிலம்,கட்டிடம் நீங்கலாக) நிறுவிட வாய்ப்பு உள்ளது. மேற்சொன்ன நடைமுறைச்சிக்கல்கள்,மாறி வரும் நவீன தொழில் நுட்பம்,சிறு தேயிலை விவசாயிகளின் நியாயமான முதலீட்டு சக்தி(investment power) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறு தேயிலை விவசாயிகளின் தொழிற்சாலைக் கனவினை நிறைவேற்றிட கீழ்கண்டவாறு தனது பங்கினை அளிக்க உள்ளது.
1) குறு தேயிலைத் தொழிற்சாலைக்கான மாதிரி திட்ட அறிக்கை தயாரித்தல்.

2) சிறுதேயிலை விவசாயிகளை தொழில் துவங்க ஊக்குவித்து ,அதற்கான தொழில் அறிவை அளித்தல்.

3) தேவைப்படும் தொழில் நுட்ப நிபுணர்களின் உதவியைப் பெற உதவுதல்.

4) அவர்தம் தொழிற்சாலைக்குத் தேவைப்படும் தரமான இயந்திரங்களை,உதிரிப்பாகங்களைப் பெற உதவுதல்.

5) உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்த உதவுதல்.

6) நிதி ஆதாரங்களைப் பெற ஆலோசனை அளித்தல்.

7) துறை ரீதியான அனுமதிகளைப் பெற்றுத்தர உதவுதல்; ஆலோசனை வழங்குதல்.

தற்போது 16 தொழில் கூட்டுறவுத்தேயிலைத் தொழிற்சாலைகளையும்,ஆசியாவிலேயே முதன்முதலாக வடிவமைக்கப்பட்ட மின்னணு தேயிலைத்தூள் ஏல மையத்தினையும் தன்னகத்தே கொண்டு தேயிலை உலகின் முன்னோடி சக்தியாக கடந்த பல தலைமுறைகளாக விளங்கி வரும் “இண்ட்கோசர்வ்” ,இது போன்ற குறு தேயிலைத் தொழிற்சாலைகளை அதிகமாக உருவாவது எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்று என்றும் இத்தொழிற்சாலைகளின் மூலம் சிறுதேயிலை விவசாயிகள் ,தங்களின் தோட்டத்தில் விளைந்த பசுந்தேயிலைத் தழைக்கான அதிகபட்ச பலனைத் தாங்களே பெற இயலும் என்றும் அதன் மூலம் அவர்களின் வாழக்கைத் தரம் உயரும் என்றும் கருதுகிறது.

எனவே ஆர்வமுள்ள சிறுதேயிலை விவசாயிகள் கூடுதல் விவரங்களுக்கு இண்ட்கோசர்வை அணுகலாம்….

செ.சங்கரநாராயணன், துணைப் பொதுமேலாளர், இண்ட்கோசர்வ்